அசுரன் சீன மொழியில் ரீமேக் ஆகிறதா? கலைப்புலி தாணு விளக்கம்

Dhanush in Asuran
Dhanush in Asuran

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி சேர்ந்தாலே அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிச்சயம் எழும். அப்படி சென்ற வருடம் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அசுரத்தனமாக வசூலை குவித்தது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தினை பாராட்டி தள்ளினர்.

வெக்கை என்ற நாவலின் அடிப்படையில் உருவான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் அசுரன் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ் தனுஷ் நடித்த வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அசுரன் கதையை சீன மொழியில் ரீமேக் செய்ய ஒரு நிறுவனம் தயாரிப்பாளர் தாணு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. இதுவரை பல தமிழ் படங்கள் டப் செய்யப்பட்டு அங்கு வெளியாகி இருந்தாலும், அங்கு ரீமேக் செய்யப்பட்டது இல்லை. அதனால் வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை தனுஷுக்கு கிடைக்கப் போவதாக அவரது ரசிகர்கள் அது பற்றி ட்விட்டரில் கொண்டாடினர்.

ஆனால் சீன மொழியில் ரீமேக் என்பது முற்றிலும் வதந்தி என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட மட்டுமே முயற்சி நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் கன்னட மொழியிலும் விரைவில் அசுரன் ரீமேக் ஆகவுள்ளது எனவும் கலைப்புலி தாணு பேட்டி அளித்துள்ளார்.