தமிழ்நாட்டில் தியேட்டர் திறக்கும் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்

கொரோனா வைரஸ் பரவ துவங்கிய மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியா முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் என்ற காரணத்தினால் தியேட்டர்கள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் அதற்கு பிறகு படிப்படியாக பல தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தியேட்டர் திறப்பது பற்றி எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காமல் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே சினிமா துறையினர் இது பற்றி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (31.10.2020) அரசு வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பவேண்டும் என்கிற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா துறையினர் வரவேற்று உள்ளனர். நெல்லையில் உள்ள பிரபல தியேட்டரான ராம் முத்துராம் சினிமாஸ் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில் தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறி இருக்கிறார்கள்.

சென்னை ரோகினி தியேட்டர் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில் ‘#FansFortRohini is back!! Get ready to celebrate movies in theatre with new normal! NOVEMBER 10th!” என குறிப்பிட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள ஜிகே சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில் இது ஒரு பெரிய relief என தெரிவித்து உள்ளார்.