அஜித் ரசிகர்களை கவரும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம்

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜித் தான் மெயின் ரோல் என்றால் மிகையாகாது. அஜித்தின் வெறியனாகவே வாழ்ந்திருக்கிறார் ஆர்.கே.

அணைத்’தல’ப்பட்டி அஜித் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா பாண்டி (ஆர்.கே.சுரேஷ்), அஜித்தின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவுக்கு தீவிர பக்தர். கட்டிட தொழில் செய்யும் பில்லா பாண்டிக்கு அவரது மாமா மாரிமுத்துவின் மகள் சாந்தினி மீது காதல். சாந்தினிக்கும் பில்லா பாண்டி தான் உயிர். ஆனால் இவர்களது காதல் மாரிமுத்துக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டி மீது இந்துஜாவுக்கு ஒருதலை காதல். இந்த விஷயம் இந்துஜாவின் தந்தைக்கு தெரியவர, பாண்டியை அடித்து விரட்டுகிறார். இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவ, பில்லா பாண்டியின் காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் பில்லா பாண்டி யாருடன் ஜோடி சேர்கிறார் என்பதை சென்டிமெண்ட் கலந்து உணர்வுபூர்வமாக சொல்கிறது படம்.

ஹீரோவாக புரமோட் ஆகியிருக்கும் ஆர்.கே.சுரேஷ், அஜித்தை வைத்து இந்தப் படத்தை புரமோட் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், அது முழுதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒருக்கட்டத்திற்கு மேல் அஜித் புராணம் ஆடியன்ஸுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

இந்துஜாவின் நடிப்பை பாராட்டலாம். கெஸ்ட் ரோலில் வரும் சூரியும், விதார்த்தும் சர்ப்ரைஸ் மொமண்ட் தருகிறார்கள். முதல் பாதி கொஞ்சம் போர் அடித்தாலும், இரண்டாம் பாதியில் மசாலா தூவி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது.

ஒட்டுமொத்தமாக, அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா ரசிகர்களும் ஒரு முறை ரசிக்கும் படி வந்துள்ளது பில்லா பாண்டி.